தமிழகத்தில் பி.எஸ்.என்.எல். பயனர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், அடுத்த ஓராண்டுக்குள் மாநிலம் முழுவதும் BSNL 5G சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று சென்னை பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் சுதாகரராவ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 5ஜி சேவை
சென்னை பி.எஸ்.என்.எல். சேவை எல்லைக்குள் தற்போது மொத்தம் 1,902 செல்போன் கோபுரங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் முதற்கட்டமாக 1,214 கோபுரங்கள் 4ஜி (4G) சேவை வழங்கும் அதிநவீன தொழில் நுட்பத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
மீதமுள்ள செல்போன் கோபுரங்களும் அடுத்த 6 மாதங்களுக்குள் முழுமையாக 4ஜி தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தப்படும். இதனைத் தொடர்ந்து, அடுத்த ஓராண்டு காலத்திற்குள் தமிழகம் முழுவதும் பி.எஸ்.என்.எல். 5ஜி (5G) சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் என்று சென்னை தலைமை பொது மேலாளர் சுதாகரராவ் உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க : குறைந்த விலை ரீசார்ஜ் பிளான்களை தூக்கிய ஏர்டெல் ; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
ரூ.1-க்கு பிரீபேய்டு சேவை மற்றும் இலவச சிம்
நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதிரடிச் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி, புதிய வாடிக்கையாளர்களுக்கு இலவச சிம் கார்டுடன் வெறும் 1 ரூபாய்க்குப் பிரீபேய்டு திட்டம் வழங்கப்படுகிறது.
இந்த ரூ.1 சலுகைத் திட்டத்தில் 24 நாட்கள் கால அவகாசத்துடன் அன்லிமிடெட் தொலைபேசி அழைப்புகள், தினமும் 1 ஜி.பி. அதிவேக டேட்டா மற்றும் 100 இலவச SMS ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த சிறப்புச் சலுகை வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
