இந்தியாவில் எல்பிஜி மற்றும் பிஎன்ஜி சமையல் எரிவாயுக்களுக்கு மாற்றாகப் எத்தனாலை பயன்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த ‘எல்பிஜி உபகரணங்கள் ஆராய்ச்சி மையம்’ (LERC), பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹெச்பிசிஎல் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகியவற்றுடன் இணைந்து எத்தனால் அடிப்படையிலான சமையல் எரிபொருளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மாற்றுச் சமையல் எரிபொருள்களை ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எத்தனால் அடுப்புகளால் என்ன நன்மை?
ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில் ஏற்கனவே எத்தனால் மூலம் இயங்கும் அடுப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இவை வழக்கமான மண்எண்ணெய் அடுப்புகளைப் போன்று செயல்படக்கூடியவை.
எத்தனால் அடுப்புகள் புகையோ, கரியோ இல்லாமல் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் என்றும், இது வீட்டிற்குள் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் கணிசமாகக் குறைக்கும் என்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் தெரிவித்துள்ளது.
தற்போது எத்தனால் அடிப்படையிலான சமையல் எரிபொருளுக்கான கொள்கை முடிவுகள் ஏதும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், வரும் காலங்களில் இது எல்பிஜி சிலிண்டர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
