எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ பல தடைகளை தாண்டி கடந்த 23ம் தேதி ரிலீஸ் செய்யபட்டது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் படத்தை திருவிழா போல வரவேற்று கொண்டாடினர்.
வெளியான சில மணி நேரங்களிலேயே படம் இணையத்தில் கசிந்தது. இருப்பினும், விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் திரையரங்குகளில் படத்தை கொண்டாடி வருகின்றனர். இதுவரை படம் ரூ.250 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஜனநாயகன் படத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சின்னசாமி தாக்கல் செய்த மனுவில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் பாப்பாபட்டி பகுதி வன்முறை நிறைந்த இடமாக தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், அந்தப் பகுதி மக்களின் உரிமைப் போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாகவும், திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் சில காட்சிகள் வன்முறையைத் தூண்டும் வகையில் உள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் வாதம் குறித்து கேள்வி எழுப்பினார். மனுதாரர் சமூக வலைதளங்களில் வெளியான படத்தைப் பார்த்ததாகக் கூறியிருப்பதாகவும், சட்டவிரோதமாக வெளியான திரைப்படத்தை பார்த்துவிட்டு அதற்கு எதிராக ஆட்சேபனை தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என வாதிட்டார்.
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சட்டவிரோத இணையதளங்களில் வெளியாகும் திரைப்படங்களை பார்ப்பது ஊக்குவிக்கப்படக்கூடிய செயல் அல்ல என்று கருத்து தெரிவித்தனர். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
