இந்திய ரயில்வேயின் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படும் துணிகள் மற்றும் பெட்சீட்களின் தூய்மையை உறுதி செய்ய, செயற்கை நுண்ணறிவு கேமரா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்குப் பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்தத் தகவலை முறைப்படி தெரிவித்துள்ளார்.
ரயில்வேயில் துவைக்கப்படும் துணிகளின் தரத்தை ஆய்வு செய்யவும், அவற்றில் ஏதேனும் கறைகள் உள்ளனவா என்பதைத் துல்லியமாகக் கண்டறியவும் தானியங்கி ஏஐ கேமரா தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தற்போது மத்திய ரயில்வேயின் புனே கோட்டத்திலும், வடமேற்கு ரயில்வேயின் ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் கோட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இதனை கண்காணிக்க சிசிடிவி கேமராக்களும், துணிகளின் வெண்மை மற்றும் சுத்தத்தைச் சோதிக்க ‘ஒயிட்டோ-மீட்டர்’ கருவிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுவரை நாடு முழுவதும் உள்ள 3,215 ரயில் நிலையங்களிலும், 13,409 ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
