இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பங்கி பள்ளத்தாக்கு பகுதியில் பயணிகள் சென்ற வாகனம் மீது ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இமாச்சலப் பிரதேச மாநிலம், சம்பா மாவட்டத்தில் உள்ள கில்லார் – உதய்பூர் சாலையில் பங்கி பள்ளத்தாக்கு பகுதி அமைந்துள்ளது. இந்தச் சாலையில் டாடா சுமோ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது மலையிலிருந்து ராட்சத பாறைகள் திடீரென உருண்டு வாகனம் மீது விழுந்தன. இதனால் வாகனம் முழுவதும் அப்பளம்போல் நொறுங்கியது. அதில் பயணித்த 13 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர் பலத்த காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர், வாகனத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவு காரணமாகச் சாலையில் விழுந்த பாறைகளை அகற்றி, போக்குவரத்தைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
