2027-ஆம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் கடுமையான கோடை வெப்பத்தை எதிர்கொள்ள நேரிடலாம் என காலநிலை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக எல் நினோ எனப்படும் இயற்கை காலநிலை நிகழ்வு வலுப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
2026 இறுதியில் தொடங்கும் எல் நினோ தாக்கம் 2027-ல் அதிகளவில் உணரப்பட வாய்ப்பு உள்ளது என இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் மற்றும் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
எல் நினோ என்றால் என்ன?
எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் ஒரு இயற்கை காலநிலை நிகழ்வாகும். இந்த வெப்ப மாற்றம் உலகின் பல பகுதிகளில் மழை, வெப்பநிலை மற்றும் காற்றழுத்த அமைப்புகளை மாற்றும் திறன் கொண்டது. அதன் தாக்கம் ஒவ்வொரு நாட்டிலும் வேறுபட்டாலும், தெற்காசிய நாடுகளில் வெப்பநிலை உயர்வு மற்றும் மழை குறைவு போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம்.
ஏன் 2027 கோடை அதிக வெப்பமாக இருக்கலாம்?
விஞ்ஞானிகளின் விளக்கப்படி, எல் நினோ உருவாகும் நேரத்தில் அதன் முழு தாக்கம் உடனடியாக வெளிப்படாது. கடல்கள் அதிக வெப்பத்தை சேமித்து வைத்து, அதை பல மாதங்கள் கழித்து வளிமண்டலத்திற்கு வெளியிடுகின்றன. இதனால், எல் நினோ உச்சத்தை எட்டிய பிறகான ஆண்டில்தான் உலகளாவிய வெப்பநிலை அதிகமாக பதிவாகும்.
இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
INCOIS வெளியிட்டுள்ள கணிப்பின்படி, எல் நினோ நிலை 2026 நவம்பர் முதல் 2027 ஜனவரி வரை வலுப்பெற்று, இந்தியப் பெருங்கடலின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 2027 ஏப்ரல்-மே மாதங்கள் வரை அதிகமாகவே நீடிக்கலாம். இதன் விளைவாக, தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைய வாய்ப்பு உள்ளது. 2027ம் ஆண்டில் கோடையில் அதிக வெப்ப அலைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
முன்னெச்சரிக்கை அவசியம்
2027 கோடை காலம் எப்படி இருக்கும் என்பதை இப்போதே உறுதியாகக் கூற முடியாது. இருப்பினும், தற்போதைய காலநிலை கணிப்புகள் கடுமையான வெப்பத்திற்கான அபாயத்தை சுட்டிக்காட்டுவதால், நீர் மேலாண்மை, விவசாய திட்டமிடல் மற்றும் பொதுச் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது அவசியமாக பார்க்கப்படுகிறது.
