பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பதால் வாகன என்ஜின் சேதமடையுமா?

இந்தியாவில் காற்று மாசுபாட்டைக் குறைக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் திட்டம் (E20 Fuel) தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்களின் என்ஜின் சேதமடையுமா, மைலேஜ் குறையுமா என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

என்ஜின் சேதமடையுமா?

எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் என்பது முறையான சோதனைகள் செய்யப்படாத ஒரு எரிபொருள் என்று கூறப்படுவதை மத்திய அரசு முற்றிலும் மறுத்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அளவில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எத்தனால் எரிபொருள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களுடன் இணைந்து, கார்களை 40,000 கிலோமீட்டர் வரையிலும், இருசக்கர வாகனங்களை 20,000 கிலோமீட்டர் வரையிலும் இயக்கி அறிவியல் பூர்வமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த நீண்ட தூர சோதனைகளின் முடிவில், வாகனங்களின் என்ஜின் திறனுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், மிகப்பழைய மாடல் வாகனங்களில் உள்ள சில ரப்பர் பாகங்களை மட்டும் வழக்கத்தை விட சற்று முன்னதாகவே மாற்ற வேண்டியிருக்கும் என்றும், வாகனத்தின் மைலேஜில் மிகக் குறைந்த அளவிலேயே மாற்றம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைலேஜ் குறையுமா? உண்மை என்ன?

மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் ஆய்வுகளின்படி, 20% எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தும்போது மைலேஜில் மிகச் சிறிய அளவிலான மாற்றம் மட்டுமே இருக்கும்.

இதற்கான அறிவியல் காரணம் என்னவென்றால், சாதாரண பெட்ரோலுடன் ஒப்பிடும்போது எத்தனாலின் ஆற்றல் அடர்த்தி சற்றே குறைவு. இதனால் மிகக் குறைவான சதவீதத்தில் மைலேஜ் மாறுபட வாய்ப்புள்ளது. ஆனால், இது அன்றாட வாகனப் பயன்பாட்டில் நாம் சாதாரணமாக உணரும்படியான பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

வாரண்டி மற்றும் இன்சூரன்ஸ் ரத்தாகுமா?

எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகனங்களின் வாரண்டி காலாவதியாகிவிடும் என்றும், விபத்து காலங்களில் காப்பீட்டுத் தொகையை பெற முடியாது என்றும் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

வாகன உற்பத்தி நிறுவனங்களும், முன்னணி காப்பீட்டு நிறுவனங்களும் எத்தனால் கலந்த எரிபொருளால் வாரண்டியோ அல்லது இன்சூரன்ஸ் உரிமைகளோ எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளன.

நாட்டுக்குக் கிடைத்த ரூ.1.90 லட்சம் கோடி லாபம்

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தின் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்திற்குப் மிகப்பெரிய பலன் கிடைத்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்ததன் மூலம் மட்டும், இதுவரை இந்தியாவிற்குச் சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அன்னியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

Related Post

Latest News