PPF கணக்கை மாற்ற திட்டமா? நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயம் இதுதான்..!

இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினரின் மிகச்சிறந்த மற்றும் பாதுகாப்பான நீண்டகாலச் சேமிப்புத் திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி முதன்மையானதாக விளங்குகிறது. மத்திய அரசின் உத்தரவாதம், வரி விலக்கு பலன்கள் மற்றும் கூட்டு வட்டி ஆகியவை இதன் கூடுதல் சிறப்பம்சங்கள் ஆகும். தற்போதைய நிலவரப்படி, பிபிஎஃப் கணக்குகளுக்கு ஆண்டுக்கு 7.1 சதவீத கூட்டு வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், வேலை மாற்றம் அல்லது வேறு ஊர்களுக்குக் குடிபெயர்தல் போன்ற காரணங்களால் தங்களது பிபிஎஃப் கணக்கை எப்படி மாற்றுவது? கணக்கின் உரிமையாளரை மாற்ற முடியுமா? போன்ற பல்வேறு சந்தேகங்கள் முதலீட்டாளர்களிடையே நீடிக்கின்றன. இது குறித்து அரசு விதித்துள்ள விதிமுறைகள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

பிபிஎஃப் கணக்கை வேறு வங்கி அல்லது தபால் நிலையத்திற்கு மாற்ற முடியுமா?

ஆம், நிச்சயமாக மாற்ற முடியும். ஒரு முதலீட்டாளர் தனது பிபிஎஃப் கணக்கை ஒரு தபால் நிலையத்தில் இருந்து மற்றொரு தபால் நிலையத்திற்கோ, தபால் நிலையத்தில் இருந்து வங்கிக்கோ அல்லது ஒரு வங்கியின் கிளையில் இருந்து மற்றொரு வங்கி கிளையிலோ எளிதாக மாற்றிக்கொள்ள அனுமதி உண்டு.

இவ்வாறு கணக்கை மாற்றுவதால், உங்களது கணக்கின் முதிர்வு காலம், இதுவரை சேர்ந்துள்ள இருப்புத் தொகை, வட்டி வருமானம் அல்லது வருமான வரி சலுகைகள் என எதிலும் எந்தவிதமான மாற்றமும் அல்லது பாதிப்பும் ஏற்படாது. புதிய கிளையிலும் உங்களது கணக்கு வழக்கம் போலவே தொடரும்.

பிபிஎஃப் கணக்கை வேறு நபரின் பெயருக்கு மாற்ற முடியுமா?

இல்லை, பிபிஎஃப் கணக்கின் உரிமையாளரை வேறு ஒரு நபருக்கு மாற்றவே முடியாது. பிபிஎஃப் கணக்கு என்பது அதைத் தொடங்கிய தனிநபரின் பெயரோடு மட்டுமே பிணைக்கப்பட்டது. கணக்கு செயல்பாட்டில் இருக்கும் வரை அதன் உரிமையை யாருக்கும் விற்கவோ, பரிசாக அளிக்கவோ அல்லது மாற்றிக் கொடுக்கவோ சட்டத்தில் இடமில்லை.

கணக்கு வைத்திருப்பவர் தனது மனைவி, பிள்ளைகள், பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்கள் என எவ்வளவு நெருங்கிய உறவினராக இருந்தாலும், தனது கணக்கை அவர்களின் பெயருக்கு மாற்ற முடியாது.

கணக்கு வைத்திருப்பவர் இறக்க நேரிட்டால் என்ன ஆகும்?

பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர் துரதிர்ஷ்டவசமாக இறக்க நேரிட்டால், அந்த கணக்கில் உள்ள மொத்தத் தொகையையும் (வட்டியுடன் சேர்த்து) அவரோடு நியமிக்கப்பட்ட வாரிசுதாரர் அல்லது சட்டப்பூர்வ வாரிசு மட்டுமே கோர முடியும்.

இங்கும் ஒரு முக்கிய விதியை கவனிக்க வேண்டும்; வாரிசுதாரராக இருப்பதால் மட்டுமே ஒருவர் அந்த பிபிஎஃப் கணக்கின் புதிய உரிமையாளராக மாறிவிட முடியாது. கணக்கு வைத்திருப்பவர் இறந்த பிறகு, அந்த கணக்கு முழுமையாக மூடப்பட்டு, அதிலுள்ள பணம் உரிய நடைமுறைகளுக்குப் பின் வாரிசிடம் ஒப்படைக்கப்படும். அதாவது, மரபுரிமை பெறலாமே தவிர, கணக்கை தொடர்ந்து இயக்க முடியாது.

கணக்கை மாற்றுவது எப்படி?

பிபிஎஃப் கணக்கை ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றுவது மிகவும் எளிதானது. தற்போது உங்களது பிபிஎஃப் கணக்கு இருக்கும் வங்கி அல்லது தபால் நிலையக் கிளைக்குச் சென்று கணக்கு மாற்றக் கோரிக்கை படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அந்த கிளை, உங்களது கணக்கு அறிக்கை வாரிசுதாரர் விவரங்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து ஆவணங்களையும் நீங்கள் கோரும் புதிய வங்கி அல்லது தபால் நிலையத்திற்கு அனுப்பி வைக்கும். புதிய கிளையில் ஆவணங்கள் பெறப்பட்டதும், அவர்கள் உங்களை அணுகி புதிய கணக்கைத் தொடங்குவதற்கான படிவங்கள் மற்றும் புதிய கேஒய்சி ஆவணங்களைக் கேட்பார்கள். அதைச் சமர்ப்பித்தவுடன் கணக்கு மாற்றப்பட்டுவிடும்.

Related Post

Latest News