இந்தியாவில் வாகனங்களுக்கான ‘E20’ எத்தனால் கலப்பு பெட்ரோல் பயன்பாடு குறித்துப் பல விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான போர்டு இந்தியா, தனது EcoSport கார் உரிமையாளர்களுக்குப் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதாவது, E20 எரிபொருளைப் பயன்படுத்துவது என்ஜினைப் பாதிக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் கார் ஓட்டுநர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
E20 பெட்ரோல் என்றால் என்ன?
80 விழுக்காடு வழக்கமான பெட்ரோல் மற்றும் 20 விழுக்காடு எத்தனால் (Ethanol) கலந்த எரிபொருள்தான் E20 பெட்ரோல் ஆகும். இது சுற்றுப்புற மாசைக் குறைக்கப் பயன்படுத்தப்படுகிறது.
போர்டு இந்தியா வெளியிட்ட எச்சரிக்கை
“E20 போன்ற அதிக எத்தனால் கலந்த எரிபொருளைப் பயன்படுத்துவது, உங்கள் காரின் என்ஜின் அல்லது புகை உமிழ்வு அமைப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். மேலும், இதனால், மைலேஜ் குறையும். உங்கள் வாகனத்தின் வாரண்டியும் பாதிக்கும்.
எனவே, உங்கள் காரில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் உடனடியாக அங்கீகரிக்கப்பட்ட போர்டு சேவை மையத்தை அணுகுமாறு கார் உரிமையாளர்களுக்கு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. பழைய மாடல் வாகனங்கள் E20 எரிபொருளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படாததே இந்த சிக்கலுக்குக் காரணம் என கூறப்படுகிறது.
