13.8 பில்லியன் ஆண்டுகளாக நடக்கும் அதிசயம்… பிரபஞ்சம் குறித்து புதிய உண்மையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

அமெரிக்காவின் வாஷிங்டனில் வெளியாகியுள்ள புதிய ஆய்வு ஒன்று, பிரபஞ்சம் இன்னும் தொடர்ந்து வேகமாக விரிவடைந்து கொண்டே இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கண்டுபிடிப்பு, கடந்த சில ஆண்டுகளாக விஞ்ஞான உலகில் நிலவி வந்த பெரிய விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானியல் விஞ்ஞானி பிரோடி போபோவிக் தலைமையிலான ஆராய்ச்சி குழு இந்த ஆய்வை மேற்கொண்டது. அவர்களது ஆய்வு முடிவுகள், பிரபல அறிவியல் இதழான Monthly Notices of the Royal Astronomical Society இதழில் வெளியாகியுள்ளது.

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (James Webb Space Telescope) கடந்த 2025 ஜூலை 10ஆம் தேதி வெளியிட்ட இந்த படத்தில், வாயு, தூசி மற்றும் புதிதாக உருவாகும் இளம் நட்சத்திரங்களால் ஆன “கேட்ஸ் பா நெபுலா” (Cat’s Paw Nebula) எனப்படும் நட்சத்திர உருவாக்க பகுதியின் ஒரு பகுதி இடம்பெற்றுள்ளது. இந்த கேட்ஸ் பா நெபுலா, பூமியிலிருந்து சுமார் 4,000 ஒளி ஆண்டுகள் தொலைவில், ஸ்கார்பியஸ் (Scorpius) விண்மீன் கூட்டத்தில் அமைந்துள்ளது.

விஞ்ஞானிகள் இந்த ஆய்வுக்காக “Type Ia Supernova” எனப்படும் மிக சக்திவாய்ந்த நட்சத்திர வெடிப்புகளை ஆய்வு செய்தனர். இந்த வெடிப்புகள் ஒளியின் பிரகாசம் மூலம் விண்வெளியில் உள்ள மிகப்பெரிய தூரங்களை அளவிட உதவுகின்றன. இதன் மூலம் பிரபஞ்சம் எந்த வேகத்தில் விரிவடைகிறது என்பதை கணக்கிட முடிகிறது. ஏற்கனவே 1998-ஆம் ஆண்டு, பிரபஞ்சம் வேகமாக விரிவடைகிறது என்ற கண்டுபிடிப்பு வெளியானது. அதற்கான காரணமாக “டார்க் எனர்ஜி” எனப்படும் மர்ம சக்தி செயல்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் கடந்த 2025-ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வில், டார்க் எனர்ஜி பலவீனமடைந்து விட்டது, இதனால் பிரபஞ்சத்தின் விரிவடைதல் வேகம் குறைந்துவிட்டது என்று கூறப்பட்டது. இது உலக விஞ்ஞானிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தற்போது வெளியாகியுள்ள புதிய ஆய்வு, அந்த கருத்தை முற்றிலும் மறுத்துள்ளது. பிரபஞ்சம் இன்னும் வேகமாக விரிவடைந்து கொண்டிருக்கிறது என்றும், டார்க் எனர்ஜி தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது என்றும் புதிய ஆதாரங்களுடன் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விஞ்ஞானிகளின் கணிப்புப்படி, இன்று நாம் காணும் பிரபஞ்சம் சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட “Big Bang” எனப்படும் மிகப்பெரிய வெடிப்பில் உருவானது. அதிலிருந்து தொடர்ந்து பிரபஞ்சம் விரிவடைந்து வருகிறது. பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களில் வெறும் 5% மட்டுமே சாதாரண பொருட்கள் — அதாவது நட்சத்திரங்கள், கோள்கள், தூசிகள் போன்றவை. மீதமுள்ள 27% “இருண்ட பொருள்” என்றும், 68% “இருண்ட ஆற்றல்” என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சிலியில் புதிதாக செயல்படத் தொடங்கியுள்ள ‘வேரா ரூபின்’ ஆய்வகம் மற்றும் விரைவில் விண்ணில் செலுத்தப்படவுள்ள ‘நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளித் தொலைநோக்கி’ போன்ற புதிய விண்வெளி ஆய்வு திட்டங்கள், டார்க் எனர்ஜி பற்றிய மேலும் பல ரகசியங்களை கண்டுபிடிக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த புதிய கண்டுபிடிப்பு, மனிதர்கள் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளாத பிரபஞ்சத்தின் மர்மங்கள் குறித்து மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. உலக விஞ்ஞானிகளின் கவனம் தற்போது மீண்டும் “டார்க் எனர்ஜி” மீது திரும்பியுள்ளது.

Related Post

Latest News