இந்தியாவில் கோடைக்கால வெப்ப அலைகள் அதிகரித்து வரும் நிலையில், அதனுடன் சேர்ந்து உருவாகும் ஓசோன் மாசு இதய மற்றும் நுரையீரல் நோயால் ஏற்படும் மரணங்களை கணிசமாக அதிகரிக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் புதிய ஆய்வில் வெளியாகியுள்ளது.
சர்வதேச அறிவியல் இதழ் ஒன்றில் வெளியிட்ட இந்த ஆய்வின் படி, இந்தியாவில் கடும் வெப்ப அலைகள் ஏற்படும் நாட்களில் தரை மட்ட ஓசோன் அளவு பாதுகாப்பு வரம்பை தாண்டி ஆபத்தான அளவுக்கு உயர்கிறது.
உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள பாதுகாப்பு அளவு ஒரு கன மீட்டருக்கு 70 மைக்ரோகிராம் என்ற நிலையில், வட இந்தியாவில் வெப்ப அலை காலங்களில் இது 85 முதல் 110 மைக்ரோகிராம் வரை பதிவாகியுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. 2024ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வெப்ப அலை நாட்களில் மட்டும், ஓசோன் மாசு காரணமாக இதய நோய் மற்றும் நுரையீரல் பாதிப்புகளால் சுமார் 830 கூடுதல் மரணங்கள் ஏற்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
அதில் சுமார் 490 பேர் இதய நோயால் மற்றும் 342 பேர் COPD எனப்படும் நீண்டகால நுரையீரல் நோயால் உயிரிழந்திருக்கலாம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஓசோன் என்பது நேரடியாக வெளியேறும் வாயு அல்ல. வாகன புகை, தொழிற்சாலை வெளியீடு போன்ற மாசு வாயுக்கள் மீது கடுமையான சூரிய வெப்பம் தாக்கும்போது உருவாகும் இரண்டாம் நிலை மாசு ஆகும். வெப்பம் அதிகரிக்கும்போது இந்த ரசாயன மாற்றம் வேகமாக நடைபெறுவதால், காற்றின் தரம் மேலும் மோசமடைகிறது.
இந்த ஆய்வை கரக்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் மற்றும் கேரள பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்டனர். 2004 முதல் 2024 வரை இந்திய வானிலை ஆய்வு தரவுகள் மற்றும் செயற்கைக்கோள் தகவல்களை பயன்படுத்தி ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் மொத்தம் 188 வெப்ப அலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக 2010, 2016, 2019 மற்றும் 2024 ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலைகள், வலுவான El Niño காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையவை என்றும் ஆய்வு கூறுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கையில், இந்தியாவில் வெப்ப அலை மற்றும் காற்று மாசு இணைந்த இரட்டை ஆபத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அரசு உடனடியாக காலநிலை மாற்றம் மற்றும் காற்று மாசு தொடர்பான ஒருங்கிணைந்த கொள்கைகளை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
வெயில் அதிகரிப்பது வெறும் அசௌகரியம் மட்டுமல்ல… நாம் சுவாசிக்கும் காற்றே உயிருக்கு ஆபத்தாக மாறி வருகிறது என்பதே இந்த ஆய்வு காட்டும் மிகப்பெரிய எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
