தமிழ் சினிமாவில் வடிவேலு, விவேக் உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ள பாவா லெட்சுமணன், குறிப்பாக ‘மாயி’ திரைப்படத்தில் இடம்பெற்ற “வாம்மா மின்னல்” என்ற வசனம் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
சுமார் 35 ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்து வரும் பாவா லெட்சுமணன், நீரிழிவு நோய் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்த சூழலில், பாவா லெட்சுமணனுக்கு சமீபத்தில் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
இதற்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவரது காலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவரது கால் கட்டைவிரல் உட்பட 3 விரல்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாவா லெட்சுமணன் கூறுகையில், “அறுவை சிகிச்சைக்குப் பிறகு என்னால் நடக்க முடியாது என்று தவறான தகவல்கள் பரவின. இதனால் திரைப்பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன” என வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது வருமானம் இல்லாமல் சிரமப்படுவதாகவும், சிலர் தன்னுடைய நிலையை அறிந்து உதவி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் நகைச்சுவை வசனங்களால் ரசிகர்களை சிரிக்க வைத்த நடிகர் இன்று எதிர்கொள்ளும் இந்த சூழல் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
