தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகளில் இன்று (ஜூன் 14) இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள்
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதியிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு மழை வாய்ப்பு
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
