மத்திய பிரதேச மாநிலம், கஜூராவோவில் இருந்து உதய்பூர் நோக்கி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மொரேனா மாவட்டம் தேஜம்பூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, ஒரு பெட்டியில் செல்போன் வெடித்து தீ ஏற்பட்டதாக தவறான தகவல் பயணிகளிடையே பரவியது. இதனால், பயந்துபோன பயணிகளில் சிலர் அபாய சங்கிலியை இழுத்ததால், ரயில் அவசரமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் அச்சத்தில் இருந்த பயணிகள் பலர் ரயிலிலிருந்து தண்டவாளத்தில் குதித்தனர்.
அந்த நேரத்தில் எதிர்திசையில் வேகமாக வந்த பதால்கோட் எக்ஸ்பிரஸ் (Patalkot Express) ரயில், தண்டவாளத்தில் நின்றிருந்த பயணிகள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் மேலும் 4 பேர் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. குழந்தைகள் மற்றும் பெண்களும் இந்த துயரத்தில் சிக்கியிருப்பது சோகத்தை அதிகரித்துள்ளது.
இந்த விபத்து குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற வதந்திகள் மீண்டும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
