கேரளாவில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இலவச அரசு பேருந்து பயணத் திட்டம் நாளை (ஜூன் 15) முதல் அமலுக்கு வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்தத் திட்டம், “பிரியதர்ஷினி” என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, கேரள அரசு போக்குவரத்து கழகமான KSRTC-க்கு சொந்தமான பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண வசதி வழங்கப்படும் என காங்கிரஸ் கூட்டணி உறுதியளித்திருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து, அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து, முதல்-மந்திரி சதீசன் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் “பிரியதர்ஷினி” திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார்.
இந்தத் திட்டத்தின் கீழ், பெண்கள் மற்றும் திருநங்கைகள் KSRTC-யின் 7 வகையான சாதாரண சேவை பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம். இலவச பயண வசதி வழங்கப்படும் பேருந்துகளை பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் சிறப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட உள்ளன.
