அசாம் மாநிலத்தின், ஜோர்ஹாட் பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான AN-32 ராணுவ சரக்கு விமானம் இன்று (ஜூன் 13) தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது.
இந்த விபத்து தொடர்பாக இந்திய விமானப்படை தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் வெளியிட்ட தகவலில், “AN-32 ரக விமானம் இன்று ஜோர்ஹாட்டில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிய உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான AN-32 விமானம் பொதுவாக ராணுவ தளங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உபகரணங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் முக்கிய சரக்கு விமானமாகும். விமானம் ரௌரியா விமானப்படை தள எல்லைக்குள் விழுந்ததால் உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன.
விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
