நாடு முழுவதும் வீட்டு உபயோக எல்.பி.ஜி. கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் மற்றும் கேஸ் சிலிண்டர் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதன் காரணமாக வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை இந்த மாத தொடக்கத்தில் ரூ.46 உயர்த்தப்பட்டு ரூ.3,283 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.928.50-லிருந்து ரூ.957.50 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ரூ.60 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மேலும் ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சிலிண்டர் விலை மொத்தம் ரூ.89 உயர்ந்துள்ளது.
