ரூ.50,000 வரை கடன்.. ஆதார் கார்டு இருந்தால் போதும் : எப்படி விண்ணப்பிக்கலாம்?

நம் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவர்கள் நடைபாதை வியாபாரிகள். உள்ளூரிலும் வெளியூரிலும் தரம் மற்றும் குறைந்த விலை காரணமாக இவர்களைத் தேடிச் சென்று மக்கள் பொருள்களை வாங்குகின்றனர். இத்தகைய சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசால் கொண்டு வரப்பட்டதுதான் ‘பிரதமர் ஸ்வநிதி திட்டம்’.

கொரோனா பேரிடர் காலத்தில் கடுமையான பொருளாதார பாதிப்பைச் சந்தித்த தெருவோர வியாபாரிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் இத்திட்டம் தொடங்கப்பட்டது. பிணையின்றி கடன் வழங்குதல், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவித்தல் மற்றும் சிறு வணிகர்களை வங்கிச் சேவைகளுடன் இணைப்பது ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு இது செயல்படுகிறது.

கடன் உதவி மற்றும் சலுகைகள்:

இத்திட்டத்தின் மூலம் முதல் கட்டமாகப் பயனாளர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் வரை முதலீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. இதனைச் சரியான முறையில் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு அடுத்தடுத்த கட்டங்களில் இருபதாயிரம் மற்றும் ஐம்பதாயிரம் ரூபாய் வரை கூடுதல் கடன் வசதி செய்யப்படுகிறது. இவற்றுக்கு ஏழு சதவீத வட்டி மானியமும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணத் திரும்பப் பெறல் (கேஷ்பேக்) ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. தகுதியான சிறந்த பயனாளர்களுக்குக் கடன் அட்டைகளும் தற்பொழுது வழங்கப்பட்டு வருகின்றன.

ஆரம்பத்தில் ஐம்பது லட்சம் வியாபாரிகளை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், தற்பொழுது நாடு முழுவதும் எழுபத்தைந்து லட்சத்திற்கும் அதிகமான நகர்ப்புற வியாபாரிகளுக்குப் பலன் அளித்துள்ளது. இதன் மூலம் சுமார் பதினேழாயிரத்து எண்ணூறு கோடி ரூபாய் கடன் பிணையின்றி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மத்திய அரசு வரும் 2030 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதன் மூலம் ஒரு கோடியே பதினைந்து லட்சம் பயனாளிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு வணிகர்கள் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற்று முன்னிலையில் உள்ளனர். ஆய்வுகளின்படி, இத்திட்டத்தால் பயனாளிகளின் ஆண்டு வருமானம் சராசரியாக இருபது சதவீதம் உயர்ந்துள்ளது. இதில் நாற்பத்தாறு சதவீதம் பெண்களும், எழுபது சதவீதம் நலிவடைந்த பிரிவினரும் அடங்குவர்.

விண்ணப்பிக்கும் தகுதி மற்றும் வழிமுறைகள்:

நகர்ப்புறம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 2020 மார்ச் 24 ஆம் தேதிக்கு முன்பிருந்தே தெருவோர வியாபாரம் செய்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாநகராட்சி அல்லது நகராட்சி வழங்கிய விற்பனைச் சான்றிதழ் அல்லது பரிந்துரைக் கடிதம் பெற்றிருப்பது அவசியமாகும்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் மூலமாகவோ அல்லது பொதுச் சேவை மையங்கள் வழியாகவோ விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் இதற்கான விவரங்களைப் பெற முடியும்.

தேவையான ஆவணங்கள்:

  • கைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்ட அடையாள அட்டை
  • வாக்காளர் அடையாள அட்டை
  • வங்கிக் கணக்குப் புத்தகம்
  • உள்ளாட்சி அமைப்பு வழங்கிய வியாபாரி அடையாள அட்டை அல்லது இணையவழி பரிந்துரைக் கடிதம்.

Related Post

Latest News