சில நிமிடங்களிலேயே அதிவேக டெலிவரி – அமேசான் புதிய திட்டம்

இந்தியாவில் அதிவேக டெலிவரி சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அமேசான் தனது புதிய முயற்சியான Amazon Now’ சேவையை மிகப் பெரிய அளவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக நிறுவனம் சுமார் ரூ. 2,800 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமே செயல்பட்டு வரும் ‘Amazon Now’ சேவை விரைவில் இந்தியாவின் 100-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. இதில் கொச்சி, புனே, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், லக்னோ, விசாகப்பட்டினம், மங்களூர் உள்ளிட்ட நகரங்கள் அடங்கும்.

சில நிமிடங்களில் டெலிவரி

இந்த சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் தினசரி தேவைகளான மளிகைப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், அழகு சாதனங்கள், சிறிய மின்னணு சாதனங்கள், குழந்தை பராமரிப்பு பொருட்கள் என 1000-க்கும் மேற்பட்ட பொருட்களை சில நிமிடங்களிலேயே பெற முடியும்.

மைக்ரோ டெலிவரி மையங்கள்

இந்த விரிவாக்கத்திற்காக அமேசான் இந்தியா முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட சிறிய டெலிவரி மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வேகமான டெலிவரி சேவை வழங்கப்படும்.

இந்தியாவில் கடும் போட்டி நிலை

அதிவேக டெலிவரி துறையில் தற்போது பல நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன. சில நிமிடங்களில் பொருட்கள் வழங்கும் சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், அமேசானின் இந்த பெரிய முதலீடு சந்தையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News