வாடிக்கையாளருக்கு தவறான பொருள் டெலிவரி : அமேசானுக்கு ரூ. 4.68 லட்சம் அபராதம்

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் ஆர்டர் செய்த பொருளுக்குப் பதிலாக வேறு பொருளை டெலிவரி செய்து, பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்த அமேசான் நிறுவனம் மற்றும் அதன் விற்பனையாளருக்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ. 4.68 லட்சம் அபராதம் விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 2025-ல், டார்ஜிலிங்கைச் சேர்ந்த சாலமன் லெப்சா என்பவர் அமேசான் தளத்தில் ரூ. 1.43 லட்சம் மதிப்புள்ள கேமரா ஒன்றை ஆர்டர் செய்திருந்தார். ஆனால், அவருக்கு வேறு மாடல் கேமரா டெலிவரி செய்யப்பட்டது. இதுகுறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தில் அவர் புகார் அளித்தபோது, பொருளைத் திருப்பி அனுப்பினால் பணம் திருப்பி அனுப்பப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், அந்தப் கேமரா உபயோகிக்கப்பட்டு அல்லது சேதமடைந்து இருப்பதாக கூறி அமேசான் நிறுவனம் பணத்தைத் திருப்பித் தர மறுத்துவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட சாலமன், டார்ஜிலிங் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கேமராவின் அசல் விலை ரூ. 1.43 லட்சம், வாடிக்கையாளரின் மன உளைச்சலுக்கு ரூ. 2 லட்சம், அலட்சியம் மற்றும் சேவை குறைபாட்டுக்கு ரூ. 1 லட்சம், வழக்குச் செலவுக்காக ரூ. 25,000 என மொத்தம் ரூ. 4.68 லட்சத்தை அடுத்த 45 நாட்களுக்குள் வாடிக்கையாளருக்கு அமேசான் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், வழக்குத் தொடரப்பட்ட நாள் முதல் முழுத் தொகையும் வழங்கப்படும் நாள் வரை, ஆண்டுக்கு 9 சதவீத வட்டி கணக்கிட்டு அதையும் கூடுதலாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Post

Latest News