ஏப்ரல் 26 : இன்று உலக விமானிகள் தினம்..! ஒரு சுவாரஸ்ய பின்னணி

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26 அன்று உலகம் முழுவதும் ‘உலக விமானிகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உருவான பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது.

நொடிக்கு நொடி மாறும் வானிலை, கையில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விமானம், நம்மை நம்பி பின்னால் அமர்ந்திருக்கும் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர்… இவை அனைத்தையும் தன் தோள்களில் சுமந்து கொண்டு, மேகக் கூட்டங்களுக்கு இடையே கம்பீரமாகப் பறப்பவர்கள் தான் விமான ஓட்டிகள்.

விமானிகள் என்பது, வான்வெளியில் ஆயிரக்கணக்கான உயிர்களை பாதுகாக்கும் பொறுப்பான பணியாகும். கடுமையான காலநிலை, நீண்ட நேர பணிச்சுமை, துல்லியமான முடிவுகள் போன்ற சவால்களை எதிர்கொண்டு அவர்கள் செயற்படுகின்றனர். அதனை மீறி, உலகை இணைக்கும் பாலமாக அவர்கள் திகழ்கிறார்கள்.

துருக்கியின் முதல் விமானியான ஃபெசா எவ்ரென்செவெல் தனது முதல் விமானப் பயணத்தை மேற்கொண்ட தினத்தை நினைவுகூரும் வகையில் இந்த நாள் தேர்வு செய்யப்பட்டது. பின்னர், துருக்கி ஏர்லைன்ஸ் விமானிகள் சங்கத்தின் முயற்சியால் இது சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றது.

சாதனை படைத்த பெண் பைலட்டுகள்:

துருக்கியின் முதல் பெண் பைலட் பெட்ரியே தாஹிர் கோக்மென் ஆவார். அதேபோல், வணிக ரீதியிலான விமானங்களை இயக்கிய முதல் பெண் பைலட் மற்றும் முதல் பெண் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றவர் எமெல் அர்மான் (Emel Arman). இவர் 1997ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து நியூயார்க் நகருக்கு விமானத்தை இயக்கி சாதனை படைத்தார்.

மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு சிகாகோவில் இருந்து இஸ்தான்புல் நகருக்கு 10 மணி நேரம் நீண்ட தூரம் பயணித்த ஒரு போயிங் விமானத்தின் காக்பிட்டில் (Cockpit) இரண்டு பெண் கேப்டன்கள் மட்டுமே இருந்து வரலாற்றில் முதன்முறையாக சாதனை படைத்தனர்.

இந்த நாள், விமானிகளின் தன்னலமற்ற சேவையை நினைவுகூரும் ஒரு வாய்ப்பாக மட்டுமல்லாமல், அவர்களின் அர்ப்பணிப்பையும் திறமையையும் பாராட்டும் நாளாகவும் அமைகிறது.

Related Post

Latest News