உலக நாடுகளை கடந்த 3 மாதங்களுக்கும் மேலாகப் பதற்றத்தில் வைத்திருந்த அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதல், தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் ஆகியோர் இந்த 14 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்தத்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டுள்ளனர்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முன்னிலையில், வெர்சாய்ஸ் அரண்மனையில் நடந்த இரவு விருந்தின் போது இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்த அமைதி ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:
இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் தங்களின் ராணுவ மோதல்களை நிரந்தரமாகக் கைவிட வேண்டும். கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டிருந்த உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ இன்று முதல் முழுமையாகத் திறக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், ஈரான் மீதான எண்ணெய் வர்த்தகத் தடைகளை நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதால், ஈரான் தனது கச்சா எண்ணெயை தாராளமாக விற்க முடியும். கைமாறாக, ஈரான் தனது அணு ஆயுதச் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பைக் குறைக்க சம்மதித்துள்ளது.
ரூ.28 லட்சம் கோடி முதலீடு
ஈரானின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அமெரிக்கா, வளைகுடா நாடுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இணைந்து 300 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 28 லட்சம் கோடி) மதிப்பிலான தனியார் முதலீட்டு நிதியை உருவாக்கவுள்ளன.
எண்ணெய் விலை குறையுமா?
ஹார்முஸ் வழித்தடம் திறக்கப்பட்டாலும், போர் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறைய ஓராண்டு வரை ஆகும் என்பதால், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உடனடியாகக் குறைய வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
