அடுத்தடுத்து இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் : வெனிசுலாவில் நூற்றாண்டில் காணாத பேரழிவு

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடுத்தடுத்து இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு அந்நாட்டையே உலுக்கியுள்ளன. இந்த இயற்கை சீற்றத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி இருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெனிசுலாவில் நேற்று (ஜூன் 24) அன்று மக்கள் தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்த போது, திடீரென அடுத்தடுத்து இரு பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆகப் பதிவானது. இது மொரோன் நகரின் மேற்குப் பகுதியிலும், தலைநகர் காரகாஸிலிருந்து 168 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டிருந்தது.

இந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள், வெறும் 39 வினாடிகள் இடைவெளியில் அதே பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் தாக்கியது. இவை பூமியின் மேற்பகுதிக்கு மிக அருகில் (22 கி.மீ மற்றும் 10 கி.மீ ஆழத்தில்) ஏற்பட்டதால், இதன் தாக்கம் மிகக் கொடூரமாகப் பரவியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட போது உணவு விடுதிகள், கடைகளில் இருந்த மக்கள் அலறியடித்தபடி தெருக்களில் தஞ்சமடைந்தனர். வீடுகள் குலுங்கியதால் செல்லப் பிராணிகளைத் தூக்கிக் கொண்டு மக்கள் வீதிகளில் ஓடினர். சாலைகளில் கட்டிட இடிபாடுகளால் பெரும் புழுதிப் படலம் ஏற்பட்டது. மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும், முக்கிய சர்வதேச விமான நிலையமும் சேதமடைந்துள்ளது.

அதிகாரப்பூர்வப் பலி எண்ணிக்கை இன்னும் வெளிவரவில்லை. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கணக்கீட்டின்படி, இந்த நிலநடுக்கத்தின் வீரியத்தால் 1,000 முதல் 10,000 பேர் வரை பலியாக 39% வாய்ப்பும், பலி எண்ணிக்கை 10,000 முதல் 1 லட்சம் வரை உயர 37% வரை வாய்ப்புள்ளதாகவும் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

Related Post

Latest News