இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் என்பது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் விருப்பமான விரைவு உணவாக உள்ளது. சில நிமிடங்களில் தயாராகும் வசதி, குறைந்த விலை மற்றும் சுவை காரணமாக மாணவர்கள் முதல் அலுவலக ஊழியர்கள் வரை பலரும் இதை அடிக்கடி தேர்வு செய்கின்றனர். ஆனால், தினமும் நூடுல்ஸ் சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லதா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கிறது.
அதிக உப்பு, குறைந்த ஊட்டச்சத்து, உடல் எடை அதிகரிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை இது ஏற்படுத்தும். இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் அவ்வப்போது சாப்பிடும்போது பெரும்பாலும் பாதிப்பு ஏற்படுத்தாது. ஆனால், தினசரி உணவாக இதை சாப்பிடும் போது பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்.
இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் என்றால் என்ன?
இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் என்பது முன்கூட்டியே வேகவைத்து உலர்த்தப்பட்ட நூடுல்ஸ் ஆகும். இதனுடன் சுவையூட்டும் மசாலா பொட்டலங்களும் வழங்கப்படுகின்றன. வெந்நீரில் சில நிமிடங்கள் ஊறவைத்தாலோ அல்லது வேகவைத்தாலோ உடனடியாக சாப்பிட தயாராகிவிடும்.
ஏன் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் ஆரோக்கியமற்ற உணவாக கருதப்படுகிறது?
இன்ஸ்டன்ட் நூடுல்ஸில் பொதுவாக சுத்திகரிக்கப்பட்ட மாவு (மைதா), அதிக அளவு உப்பு, எண்ணெய், சுவையூட்டிகள் மற்றும் பாதுகாப்புப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில், அதிக சோடியம் உள்ளது. நார்ச்சத்து மிகவும் குறைவு. புரதச்சத்து குறைவாக உள்ளது. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைவாக உள்ளன. அதிக கலோரிகள் கிடைக்கின்றன. எனவே இது ஆரோக்கியமற்ற உணவாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க : புரோட்டின்கள் அதிகம் நிறைந்த பச்சைப்பயிறு சப்பாத்தி; வெறும் 20 நிமிடங்களில் செய்யலாம்
தினமும் நூடுல்ஸ் சாப்பிட்டால் ஏற்படும் 8 பாதிப்புகள்
- ஊட்டச்சத்து குறைபாடு
நூடுல்ஸ் வயிற்றை நிரப்பினாலும், உடலுக்கு தேவையான பல முக்கிய ஊட்டச்சத்துகளை வழங்காது.
- அதிக ரத்த அழுத்தம்
சுவையூட்டும் பொட்டலங்களில் உள்ள அதிக உப்பு, ரத்த அழுத்தத்தை உயர்த்தும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
- செரிமான பிரச்சினைகள்
நார்ச்சத்து குறைவாக இருப்பதால் மலச்சிக்கல் மற்றும் செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம்.
- உடல் எடை அதிகரிப்பு
அதிக கலோரி மற்றும் குறைந்த ஊட்டச்சத்து காரணமாக அடிக்கடி நூடுல்ஸ் சாப்பிடுவது உடல் எடையை உயர்த்தக்கூடும்.
- இதய ஆரோக்கிய பாதிப்பு
அதிக சோடியம் மற்றும் சில வகை பதப்படுத்தப்பட்ட கொழுப்புகள் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கலாம்.
- ரத்த சர்க்கரை ஏற்ற இறக்கம்
மைதாவால் தயாரிக்கப்படுவதால் ரத்த சர்க்கரை அளவு திடீரென உயர்ந்து பின்னர் குறையக்கூடும்.
- மெட்டபாலிக் சிண்ட்ரோம் அபாயம்
அடிக்கடி நூடுல்ஸ் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு அபாயம் அதிகரிக்கலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- முகப்பரு மற்றும் அழற்சி
சிலருக்கு அதிக உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் முகப்பரு மற்றும் உடல் அழற்சியை தூண்டக்கூடும்.
நூடுல்ஸை ஆரோக்கியமாக சாப்பிடுவது எப்படி?
கேரட், பீன்ஸ், கீரை போன்ற காய்கறிகளை சேர்க்கவும். முட்டை, சிக்கன், டோஃபு போன்ற புரத உணவுகளை சேர்க்கவும். மசாலா பொட்டலத்தை முழுவதும் பயன்படுத்தாமல் பாதி மட்டும் பயன்படுத்தவும். முழுதானிய அல்லது ஏர்-ட்ரைட் நூடுல்ஸ் வகைகளை தேர்வு செய்யவும். தினமும் சாப்பிடாமல் அவ்வப்போது மட்டும் சாப்பிடவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மருத்துவ ஆலோசனைக்கு தகுந்த மருத்துவரை அணுகவும்)
