உலகப் புகழ்பெற்ற கும்பகோணம் மகாமகம் குளத்தில் கழிவுநீர் கலந்ததாக கூறப்படும் சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
தென்னக கும்பமேளா என அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மகாமகம் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகப் பெருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறும். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) மகாமகம் குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் இருந்து கடும் துர்நாற்றத்துடன் கருப்பு நிறத்தில் கழிவுநீர் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குளத்தைச் சுற்றிய பகுதிகளில் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.
இதனை அந்த வழியாக சென்ற சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ வைரலாக பரவியதைத் தொடர்ந்து பொதுமக்கள், இந்து அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் மகாமகம் குளம் அருகே திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அறநிலையத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களின் உதவியுடன் குளத்தில் தேங்கியிருந்த கழிவுநீரையும் குப்பைகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
