இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை அனுப்ப தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா–இஸ்ரேல் இடையேயான போரின் காரணமாக, பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. அந்த வழியாக கப்பல்களை அனுமதிக்க முடியாது என்றும், அதை மீறி வந்தால் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் சுமார் 40 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை வழியாகவே வருகிறது. தற்போது இந்தியாவிடம் அடுத்த 25 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு இருந்தாலும், இந்த நிலைமை நீடித்தால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இந்த சூழலில், நெருக்கடியை சமாளிக்க இந்திய கடல் எல்லைக்கு அருகே 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயுடன் காத்திருக்கும் கப்பல்களை உடனடியாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப தயாராக இருப்பதாக ரஷிய அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இந்த கப்பல்கள் ஒரு வாரத்திற்குள் இந்தியாவை வந்தடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா அதிகளவில் ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது. ஆனால் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக அதை படிப்படியாக குறைத்து வந்தது. ஜனவரி மாதத்தில் இந்தியா நாளொன்றுக்கு மிகக் குறைவாக 11 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை மட்டுமே இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது.
