ஆப்ரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நோயால் இதுவரை 131 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காங்கோ சுகாதாரத் துறை அமைச்சர் கூறுகையில், மொத்தம் 513 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், உயிரிழந்தவர்கள் அனைவரும் எபோலா காரணமாகவே உயிரிழந்தார்களா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி அல்லது முழுமையான சிகிச்சை முறைகள் இன்னும் கிடைக்காததால் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், பரவல் வேகம் அதிகரித்து வருவதால் அவசர நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
எபோலா வைரஸ் அறிகுறிகள்
இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த 3 முதல் 8 நாட்களுக்குள் அறிகுறிகள் தெரியத் தொடங்கும். கடுமையான காய்ச்சல், தொண்டை வலி, உடல் சோர்வு, தசை வலி, உடலில் ஆங்காங்கே சிவப்பு நிறப் புள்ளிகள் அல்லது தடிப்புகள், கண்கள் சிவந்து போதல் ஆகியவை.
இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மீள்வதற்குப் பல மாதங்கள் ஆகும் என்பதால், ஆரம்பக்கால அறிகுறிகள் தென்பட்ட உடனே மருத்துவரை அணுகுவதும், தனிமைப்படுத்திக் கொள்வதும் மிகவும் அவசியமாகும்.
