ஷார்ஜாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு நோக்கிப் பறந்து கொண்டிருந்த பாகிஸ்தான் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் ஒன்று, அரபிக்கடலில் திடீரென மாயமாகியுள்ளது. விமானத்தில் பயணித்த 5 ஊழியர்களின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ‘கே2 ஏர்வேஸ்’ (K2 Airways) என்ற தனியார் சரக்கு விமான நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 (Boeing 737-400) ரக விமானம், நேற்று இரவு ஷார்ஜாவில் இருந்து கராச்சிக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.
விமானம் பாகிஸ்தான் நேரப்படி இரவு 9:18 மணியளவில் கராச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, அதன் திசையறிந்து பயணிக்கும் அமைப்பில் (Navigational System) திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளதாகப் பைலட் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
விமானம் மாயமானதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் (PAA) மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் ஆகியவை இணைந்து அரபிக்கடலில் பிரம்மாண்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
