இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு எச்சரிக்கை : மே 8 முதல் இதையெல்லாம் பண்ணாதீங்க..!

இன்ஸ்டாகிராமில் வழங்கப்பட்டு வந்த End-to-End Encrypted (E2EE) Direct Messages வசதியை நாளை முதல் (மே 8) நிறுத்தப் போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் அம்சமாக விளம்பரப்படுத்தப்பட்ட இந்த வசதி, அதிகாரப்பூர்வமாக நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டிருந்த நிலையில், நாளை முதல் செயல்படுத்தப்படுகிறது.

இந்த வசதி ஏன் நீக்கப்படுகிறது?

மெட்டா வெளியிட்ட தகவலின்படி, இந்த பாதுகாப்பு வசதியை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. பெரும்பாலான இன்ஸ்டாகிராம் பயனர்கள் சாதாரண DM-களையே பயன்படுத்தியதால், E2EE வசதியை தொடர்வதில் பயன் இல்லை என முடிவு செய்துள்ளது.

இதனால் தற்போது encrypted chat பயன்படுத்தி வரும் பயனர்கள், தங்களின் முக்கியமான மெசேஜ்கள், புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை முன்கூட்டியே சேமித்து கொள்ள வேண்டும் என்று மெட்டா அறிவுறுத்தியுள்ளது. சிலருக்கு இந்த data download செய்ய app update கூட அவசியமாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

End-to-End Encryption என்றால் என்ன?

இந்த தொழில்நுட்பத்தின் முக்கிய நோக்கம், உரையாடலில் இருக்கும் இருவரைத் தவிர வேறு யாரும் அந்த தகவல்களை பார்க்க முடியாதபடி பாதுகாப்பது. அதாவது ஹேக்கர்கள் மட்டுமல்லாமல், சேவையை வழங்கும் நிறுவனத்திற்கே கூட அந்த உரையாடலை பார்க்கவோ, படிக்கவோ முடியாது.

பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தனியுரிமையை முக்கியமாக கருதும் பயனர்களுக்கு இது முக்கியமான பாதுகாப்பு கருவியாக உள்ளது.

மறுபுறம், சட்ட அமலாக்க அமைப்புகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் இந்த வசதிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன. முழுமையான encryption காரணமாக குற்றச்செயல்கள் அல்லது குழந்தைகள் மீது நடைபெறும் ஆன்லைன் அச்சுறுத்தல்களை கண்டறிவதில் சிரமம் உள்ளதாக கூறி வந்தனர்.

மே 8க்கு பிறகு என்ன நடக்கும்?

மே 8க்கு பிறகு, இன்ஸ்டாகிராமில் உள்ள அனைத்து DM-களும் சாதாரண பாதுகாப்பு முறையிலேயே இயங்கும். அதாவது, மெசேஜ்கள் இன்னும் பாதுகாப்புடன் இருக்கும் என்றாலும், E2EE வழங்கியிருந்த “முழு தனியுரிமை பாதுகாப்பு” இனி இருக்காது.

Latest News