ஜப்பான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய மாம்பழங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பான் இவ்வாறு கடுமையான முடிவை எடுத்திருப்பது மாம்பழ ஏற்றுமதியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் விதிமுறைகளின்படி, இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் மாம்பழங்கள் அனைத்தும் ஆவி வெப்ப சுத்திகரிப்பு முறையின் மூலம் பரிசோதிக்கப்பட வேண்டும். மேலும், இந்த செயல்முறையை ஜப்பான் அதிகாரிகள் நேரில் கண்காணிக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் செயல்பட்டு வரும் சில சுத்திகரிப்பு மையங்களில் தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பதாக ஜப்பான் தரப்பு ஆய்வில் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்திய மாம்பழங்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. இந்த பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
