இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை : தவெக நிர்வாகிகள் கைது

இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரை ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (29) தமிழக வெற்றிக் கழகத்தின் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகப் பொறுப்பில் உள்ளார். இவருடைய நண்பரான ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் (27) என்பவரும் அதே கட்சியில் நிர்வாகியாக உள்ளார். இவர்கள் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த 33 வயது இளம்பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அந்தப் பெண்ணைத் தங்க வைத்த த.வெ.க நிர்வாகிகள், அவருக்குக் கொடுத்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அந்த இளம்பெண்ணை இருவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மயக்கம் தெளிந்து எழுந்த பின்னரே தனக்கு நேர்ந்த கொடூரத்தை அறிந்து அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து அப்பெண், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தவெக நிர்வாகிகளான பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related Post

Latest News