தீவிர கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட்காலத்தை இரண்டு மடங்கு அதிகரிக்கும் புதிய மாத்திரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘டாராக்ஸோன்ராசிப்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாத்திரை புற்றுநோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Revolution Medicines என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த மாத்திரை சுமார் 500 நோயாளிகளிடம் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வின் முடிவுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன:
வழக்கமான கீமோதெரபி சிகிச்சை பெற்ற புற்றுநோயாளிகள் சராசரியாக 6 மாதங்கள் மட்டுமே உயிர்வாழ்ந்தனர். ஆனால், இந்த புதிய ‘டாராக்ஸோன்ராசிப்’ மாத்திரையை எடுத்துக்கொண்ட நோயாளிகள் சராசரியாக 13 மாதங்கள் வரை உயிர்வாழ்ந்து சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் நோயாளிகளின் உயிர்வாழும் காலம் இருமடங்காக அதிகரித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கணையப் புற்றுநோயின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும் கிராஸ் என்ற புரதத்தின் செயல்பாட்டை இந்த புதிய மருந்து தடுக்கிறது. இதன் மூலம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியும் பரவலும் கட்டுப்படுத்தப்படுகின்றன.
கணையப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெரும்பாலான நோயாளிகளில் கிராஸ் மரபணு மாற்றம் காணப்படுவதால், இந்த மருந்து எதிர்காலத்தில் பலருக்கும் பயனளிக்கும் என மருத்துவர்கள் நம்புகின்றனர்.
