கொரோனா வைரஸ் எப்படி உருவானது? உலகத்தையே முடக்கிய அந்த பெருந்தொற்றின் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன? இந்த கேள்விகளுக்கு இன்னும் உலக நாடுகளிடம் தெளிவான பதில் இல்லை. இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை முன்னாள் இயக்குனர் துளசி கப்பார்ட் தனது பதவிக் காலத்தின் கடைசி நாளில் வெளியிட்டுள்ள சில அதிரடி ஆவணங்கள் உலக அளவில் பெரும் புயலை கிளப்பியுள்ளன.
அமெரிக்காவின் முன்னாள் முதன்மை மருத்துவ ஆலோசகரான டாக்டர் ஆண்டனி ஃபாசி மீது அவர் மிக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள துளசி கப்பார்ட், “இனிமேலாவது நீங்கள் உண்மையை தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது” என்று பதிவிட்டுள்ளார்.
வூஹான் ஆய்வகத்திற்கு அமெரிக்கா நிதியுதவி செய்ததா?
சீனாவின் வூஹான் நகரில் உள்ள வைரலாஜி ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் கசிந்தது என்ற சந்தேகம் ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறது. இப்போது துளசி கப்பார்ட் வெளியிட்டுள்ள ரகசிய ஆவணங்களின்படி, டாக்டர் ஆண்டனி ஃபாசி தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அமெரிக்க வரிப்பணத்தில் இருந்து பல மில்லியன் டாலர்களை வூஹான் ஆய்வகத்திற்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வவ்வால்களிடம் இருக்கும் கொரோனா வைரஸை இன்னும் ஆபத்தானதாக மாற்றி, அது மனிதர்களை எப்படி தாக்குகிறது என்று ஆராயும் ‘கெயின் ஆஃப் ஃபங்க்ஷன்’ என்ற ஆபத்தான ஆராய்ச்சிக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட்டதாக துளசி கப்பார்ட் கூறுகிறார். இந்த ஆபத்தான ஆராய்ச்சியின் விளைவாகவே உலகை அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்று உருவெடுத்திருக்கலாம் என்பது அவரது பிரதான குற்றச்சாட்டு.
ஆண்டனி ஃபாசி செய்த ‘3 கட்ட சதிவலை’
உண்மைகளை மூடிமறைக்க டாக்டர் ஃபாசி மூன்று கட்ட திட்டங்களை அரங்கேற்றினார் என்று துளசி கப்பார்ட் பகிரங்கமாக சாடியுள்ளார். வூஹான் ஆய்வகத்தில் வைரஸை பலப்படுத்தும் ஆபத்தான ஆராய்ச்சிக்கு அமெரிக்க நிதியை ரகசியமாக வழங்கியது. கொரோனா வைரஸ் இயற்கையாகவே விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது என்ற வாதத்தை உலகிற்கு நம்ப வைக்க, சில உளவுத்துறை அதிகாரிகளையும் நிபுணர்களையும் தன்வசப்படுத்தியது. மாற்று கருத்துக்களைக் கொண்ட விஞ்ஞானிகளையும், ஆய்வக கசிவு பற்றி பேசியவர்களையும் அதிகாரத்தை பயன்படுத்தி ஒடுக்கியது மற்றும் தணிக்கை செய்தது.
மிரட்டப்பட்ட உளவுத்துறை அதிகாரிகள்!
அமெரிக்க உளவுத்துறையில் பணியாற்றிய சில நேர்மையான அதிகாரிகள், கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் இருந்துதான் கசிந்தது என்று கூற முற்பட்டபோது, அவர்கள் மீது கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு, பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். மாற்று கருத்துக்களை பேச பயந்து பல அதிகாரிகள் உண்மையை புதைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆவணங்களில் இருப்பது உண்மையா?
துளசி கப்பார்ட் இந்த ஆவணங்களை “இதுவரை யாரும் பார்த்திராதவை” என்று கூறினாலும், இதில் உள்ள பல விஷயங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்க அரசியலில் விவாதிக்கப்பட்டு வருபவைதான். மேலும், இந்த ஆவணங்களில் பல பகுதிகள் கருப்பு மையால் அழிக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளன. இதனால், இதுவே இறுதியான ஆதாரம் என்று கூறிவிட முடியாது என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இருப்பினும், கொரோனா வைரஸ் காடுகளில் இருந்து இயற்கையாக பரவியதா அல்லது சீன ஆய்வக விபத்தால் உருவானதா என்ற விவாதம் துளசி கப்பார்ட்டின் இந்த அதிரடி ஆவண வெளியீட்டிற்கு பிறகு மீண்டும் உலக அரங்கில் சூடுபிடித்துள்ளது.
