உலக அரங்கில் தொழில்நுட்பத் துறையில் வல்லரசு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போட்டியில், அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சீனா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் பட்டியலின் புதிய தரவரிசையில், சீனாவின் ‘லைன்ஷைன்’ (LineShine) முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
டாப்500 தரவரிசை வெளியீடு
உலக அளவில் உள்ள அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்து, ஆண்டுக்கு இரண்டு முறை “TOP500” என்ற சர்வதேச அமைப்பு அதிகாரப்பூர்வ தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கணினி வல்லுநர்கள் மற்றும் பேராசிரியர்கள் அடங்கிய இந்தக் குழு, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தரவுகளை ஆவணப்படுத்தி வருகிறது.
ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச சூப்பர் கம்ப்யூட்டிங் மாநாட்டில், நடப்பு ஜூன் மாதத்துக்கான புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மையத்தில் நிறுவப்பட்டுள்ள ‘லைன்ஷைன்’ சூப்பர் கம்ப்யூட்டர் உலகின் மிக சக்திவாய்ந்த கணினியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘எல் கேபிடன்’ கம்ப்யூட்டரை முறியடித்த சீனா
இதுவரை உலகிலேயே அதிவேக சூப்பர் கம்ப்யூட்டராக முதலிடத்தில் நீடித்து வந்த அமெரிக்காவின் “எல் கேபிடன்” கம்ப்யூட்டர், தற்போது சீனாவின் புதிய வரவால் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த ‘லைன்ஷைன்’ சூப்பர் கம்ப்யூட்டர், அமெரிக்காவின் ‘எல் கேபிடன்’ கணினியை விட 20 சதவீதம் கூடுதல் வேகம் கொண்டது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது வினாடிக்கு 2 குவின்டில்லியன் கணக்கீடுகளைச் செய்யும் அசுர வேகம் கொண்டது. இதன் மூலம் 2017-ம் ஆண்டுக்குப் பிறகு, சீனா உலக சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளது.
