தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கியது. மனுக்களின் பரிசீலனை 6ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 234 தொகுதிகளில் 4,918 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 2,365 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 11 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.
இந்த நிலையில், வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் தொகுதியை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் தேவராஜன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஆதவ் அர்ஜுனா தனது மனைவியின் சொத்துகளை வேட்புமனுவில் குறிப்பிடாமல் மறைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், வேட்புமனு பரிசீலனையின் போது தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும், அது முறையாக பரிசீலிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், புகாரை நிராகரித்து தேர்தல் அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
