ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது அதிக திறன் கொண்ட பேட்டரி உள்ள மொபைல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. முன்பு 4000mAh அல்லது 5000mAh பேட்டரிகள் பொதுவாக இருந்த நிலையில், தற்போது 8000mAh, 10000mAh என அதிக திறன் கொண்ட பேட்டரிகளுடன் பல புதிய மாடல்கள் அறிமுகமாகி வருகின்றன.
இவ்வளவு பெரிய பேட்டரி கொண்ட மொபைலை பயன்படுத்துவது பாதுகாப்பானதா? என்ற சந்தேகம் பலரிடமும் எழுகிறது. அதற்கான விளக்கத்தை தெரிந்துகொள்வோம்.
அதிக பேட்டரி கொண்ட மொபைல்கள் ஆபத்தானதா?
அதிக திறன் கொண்ட பேட்டரி இருப்பதால் மட்டும் மொபைல் ஆபத்தானதாக மாறாது. நீண்ட நேர பேட்டரி பயன்பாட்டிற்காகவே நிறுவனங்கள் அதிக mAh கொண்ட பேட்டரிகளை வழங்குகின்றன. தரமான சார்ஜர் மற்றும் அசல் பேட்டரியை பயன்படுத்துவது முக்கியம். அதிக வெப்பம் உருவாகும் சூழல்களை தவிர்ப்பது பேட்டரியின் ஆயுளை அதிகரிக்கும். நம்பகமான நிறுவனங்களின் மொபைல்களை தேர்வு செய்வது பாதுகாப்பான தேர்வாகும்.
அதிக பேட்டரி திறன் ஏன் வழங்கப்படுகிறது?
இன்றைய ஸ்மார்ட்போன்கள் முன்பைவிட அதிக செயல்திறன் கொண்டதாக மாறியுள்ளன. பெரிய டிஸ்பிளே, 5G, தரமான கேமராக்கள், வீடியோ ஸ்ட்ரீமிங், ஆன்லைன் கேம்ஸ் மற்றும் AI அம்சங்கள் போன்றவை அதிக மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. இதனால் பயனர்கள் அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய அதிக திறன் கொண்ட பேட்டரிகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், நீண்ட நேரம் சார்ஜ் நிற்கும்.
பேட்டரியை பாதுகாப்பாக பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்?
மொபைலுடன் வழங்கப்பட்ட அசல் சார்ஜரை பயன்படுத்துங்கள். தரமற்ற அல்லது போலி சார்ஜர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். மொபைல் அதிக வெப்பம் அடையும் இடங்களில் நீண்ட நேரம் வைக்க வேண்டாம்.
மொபைல் வெப்பம் ஏற்பட்டால் உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்துங்கள். தரமற்ற சர்வீஸ் மையங்களில் பேட்டரியை மாற்றுவதை தவிர்க்க வேண்டும். சார்ஜ் செய்யும் போது காற்றோட்டம் இல்லாத இடங்களில் மொபைலை மூடி வைக்காமல் இருக்க வேண்டும்.
எப்போதும் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்வதும் கட்டாயமில்லை. மிதமான அளவில் சார்ஜ் செய்து பயன்படுத்துவது பேட்டரியின் செயல்திறனை நீண்ட காலம் பராமரிக்க உதவும். மேலும், Software Updates தவறாமல் செய்ய வேண்டும்.
