புது இயக்கத்தை தொடங்கிய அண்ணாமலை : இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரான கே. அண்ணாமலை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், அவரது ராஜினாமாவை பாஜக தேசிய தலைமை தற்போது அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய இவர் 2019ம் ஆண்டு ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், பாஜகவில் இணைந்த அண்ணாமலை 2021 முதல் 2025 வரை தமிழக பாஜக தலைவராக செயல்பட்டார்.

இது தொடர்பாக டெல்லிக்குச் சென்ற அவர், கட்சியின் தேசியத் தலைவரை நேரில் சந்தித்து ஐந்து பக்கங்கள் கொண்ட தனது விரிவான ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். அண்ணாமலை சமர்ப்பித்த பதவி விலகல் கடிதத்தை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் முறைப்படி விலகியுள்ளார்.

இந்நிலையில் பாஜக மீது கடும் குற்றம் சாட்டி அண்ணாமலை வீடியோ பதிவு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில், “புதிய அரசியல், புதிய பாதை, புதிய இயக்கம் இன்று முதல் தொடங்குகிறது. என்னுடைய கருத்துக்கு பாஜக தலைமை செவிசாய்க்கவில்லை. எதிர்காலத்தை நோக்கி பயணப்பட வேண்டிய நேரம் வந்துவிட்ட‌து. எதிர்காலம் என்னை அழைத்துச் செல்லும் பாதையில் பயணிக்க வேண்டிய நேரம் இது.

தமிழ்நாட்டில் அடுத்து நடக்க உள்ள தேர்தலில் நமது அரசியல் கட்சி போட்டியிடும். பாஜக உடன் கடந்த 18 மாதங்களாக கருத்து வேறுபாடு நீடித்தது. கடந்த டிசம்பர் 4ம் தேதியே பாஜகவில் இருந்து விலகுவதை தெரிவித்துவிட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் தனது இயக்கத்திற்கு உறுப்பினர் சேர்க்கையை அண்ணாமலை தொடங்கினார். ’இது நம்ம இயக்கம்’ என்ற பெயரில் உறுபினர்கள் இணையும் வகையில் இணையதள முகவரியையும் (https://wetheleader.org/) அண்ணாமலை பகிர்ந்துள்ளார். அண்ணாமலை இயக்கத்தில் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.

Related Post

Latest News