மயக்கம் வரப்போவதை முன்கூட்டியே அலர்ட் செய்யும் ஸ்மார்ட் வாட்ச் – அசத்தும் சாம்சங்

சாம்சங் நிறுவனத்தின் Galaxy Watch 6 குறித்து வெளியாகியுள்ள தகவல் மருத்துவ ஆய்வு தொழில்நுட்ப உலகில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச், ஒருவர் மயக்கம் அடையப்போவதை சுமார் 5 நிமிடங்களுக்கு முன்பே கணிக்க முடியும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு Chung-Ang University Gwangmyeong Hospital மருத்துவமனையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, ரத்த அழுத்தம் திடீரென குறைவது, மன அழுத்தம், பயம் அல்லது உடல் சோர்வு போன்ற காரணங்களால் ஏற்படும் திடீர் மயக்கம் ஏற்படுவதை தவிர்ப்பதே இந்த ஆய்வின் நோக்கமாக இருந்தது.

இந்த ஆய்வில் 132 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. Galaxy Watch6-இல் உள்ள PPG சென்சர் மூலம் இதய துடிப்பு மாற்றங்களை சேகரித்து, செயற்கை நுண்ணறிவு (AI) அல்காரிதம் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், மயக்கம் ஏற்படும் நேரத்தை 84.6 சதவீத துல்லியத்துடன் முன்கூட்டியே கணிக்க முடிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் உடல்நல பாதுகாப்பில் பெரிய மாற்றத்தை உருவாக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக வயதானவர்கள், இதய நோயாளிகள் மற்றும் அடிக்கடி மயக்கம் ஏற்படும் நபர்களுக்கு இது பாதுகாப்பான முன்னெச்சரிக்கை கருவியாக இருக்க வாய்ப்பு உள்ளது.

Latest News