தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் உரையாற்றிய முதல்வர் விஜய், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான உதவித்தொகையை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்துவதாக அறிவித்தார்.
மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாக உயர்வு
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ‘முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்’ கீழ் வழங்கப்படும் ஆண்டு மருத்துவக் காப்பீட்டுத் தொகை, ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படுவதாக அவர் அறிவித்தார்.
புதிய பன்னோக்கு மருத்துவமனை மற்றும் புற்றுநோய் மையங்கள்
வட சென்னைக்கு புதிய பன்னோக்கு மருத்துவமனை மற்றும் புற்றுநோய் மையங்கள்
சுகாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கில் மேலும் பல திட்டங்களை முதல்வர் பட்டியலிட்டார்:
சென்னை பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகளுடன் கூடிய அதிநவீன பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.471.80 கோடி செலவில் புற்றுநோய் சிகிச்சை தலைமை மையம் உருவாக்கப்படும்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ரூ.84 கோடி செலவில் 8 தளங்களைக் கொண்ட மண்டல புற்றுநோய் மையம் அமைக்கப்படும்.
தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி, மதுரை மற்றும் விழுப்புரம் ஆகிய 5 இடங்களில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் நிறுவப்படும்.
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை அளிக்க ரூ.673.44 கோடி மதிப்பீட்டில் “முதல்வரின் புற்றுநோய் பராமரிப்பு திட்டங்கள்” மேம்படுத்தப்படும்.
மருத்துவக் கல்வி மற்றும் பிற வசதிகள்
அரசு மருத்துவமனைகளில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தும் வகையில், ரோபோடிக் அறுவை சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த ரூ.106.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவச் சேவையின் தரத்தை உயர்த்தும் நோக்கில் ரூ.351 கோடி மதிப்பீட்டில் 6,098 கூடுதல் மருத்துவ மற்றும் செவிலியர் படிப்பு இடங்கள் உருவாக்கப்படும். இதில் 660 பி.எஸ்.சி. செவிலியர் இடங்கள், 1,925 செவிலியர் கல்லூரி இடங்கள், 2,778 துணை மருத்துவப் படிப்பு இடங்கள் மற்றும் 735 மருத்துவியல் இடங்கள் அடங்கும்.
மாநிலத்தில் 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும், திருநங்கைகளுக்கான பிரத்யேக மருத்துவச் சேவைகள் பல்வேறு மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு
முதல்வரின் இந்த அறிவிப்புகளுக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன், அமைச்சர் ஷாஜகான், எம்.எல்.ஏ.க்கள் ஜோதிமணி, காமராஜ் உள்ளிட்ட பேரவை உறுப்பினர்களும் பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் வரவேற்பு தெரிவித்தனர்.
