தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் கூட்டுறவுச் சங்க உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
பால் உற்பத்தியாளர்களின் நலன் காக்கும் நடவடிக்கை
சமீபகாலமாக மாட்டுத் தீவனம், பராமரிப்புச் செலவு மற்றும் தொழிலாளர்களின் கூலி ஆகியவை உயர்ந்துள்ள சூழலில், ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த சூழலில், முதல்வர் விஜய், சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் பால் கொள்முதல் விலை உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
முக்கிய அறிவிப்பு என்ன?
இதுவரை 4.3% கொழுப்புச் சத்து மற்றும் 8.2% இதரச் சத்துகள் கொண்ட ஒரு லிட்டர் பாலுக்கு அடிப்படை கொள்முதல் விலையாக ரூ.35-ம், அரசின் ஊக்கத்தொகையாக ரூ.3-ம் சேர்த்து மொத்தமாக ரூ.38 வழங்கப்பட்டு வந்தது.
தற்போது, கூட்டுறவுச் சங்கம் மூலமான அடிப்படை கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. அரசு வழங்கும் ஊக்கத்தொகை லிட்டருக்கு ரூ.3-லிருந்து ரூ.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இனி பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.38-க்கு பதிலாக ரூ.41 கொள்முதல் விலையாகக் கிடைக்கும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது அரசின் கடமை
சட்டப்பேரவையில் இது தொடர்பாகப் பேசிய முதல்வர் விஜய், மனிதர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் ஆதாரமாக விளங்கும் பசுக்களின் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்களின் உழைப்பு போற்றத்தக்கது. அதிகாலை நேரத்திலேயே எழுந்து கடினமாக உழைக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும் என கூறியுள்ளார்.
இந்த புதிய கொள்முதல் விலை உயர்வு காரணமாக, அரசுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.30 கோடியும், ஆண்டுக்குக் கூடுதலாக ரூ.360 கோடியும் நிதிச் சுமை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நிதி நெருக்கடி நிலவியபோதிலும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
