தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட மின்சார உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
மின்வாரிய உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு
தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு தேவையான டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் மின்சார உபகரணங்களை வழங்கியது தொடர்பாக முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. 45,000-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டதில், சுமார் ரூ.397 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில், உபகரணங்களை வழங்கிய நிறுவனங்களின் உரிமையாளர்களின் வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் மட்டும் 27 இடங்கள்
இன்று காலை முதல், சென்னையில் மட்டும் 27 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பெருங்குடியில் 4 இடங்களிலும், அண்ணா நகரில் 3 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
அதிகாரிகள் ஆய்வு
மொத்தமாக 51 இடங்களில் நடைபெறும் இந்த சோதனையில், கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் மற்றும் பிற முக்கிய பதிவுகள் ஆய்வு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புகார் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கொள்முதல் நடவடிக்கைகளின் விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
