டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டிலை வழங்கிய பிறகு அந்த தொகை திரும்ப வழங்கப்படும். இந்த சூழலில் ‘பாஸ்ட் ஸ்கேனர்’ கருவி மூலம் காலி பாட்டில்களைப் திரும்ப பெறும் திட்டம் சென்னையில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது.
பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல்
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூல் செய்யப்படுகிறது. காலி பாட்டிலை வழங்கிய பிறகு அந்த தொகை திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பணியை டாஸ்மாக் ஊழியர்களே மேற்கொள்வதற்கு எதிர்ப்பு எழுந்தது. இதனால், ஊழியர்களுக்கு ஏற்படும் கூடுதல் பணிச்சுமையை குறைக்கும் வகையில் காலி பாட்டில்களை தானியங்கி கருவி மூலம் பெற டாஸ்மாக் முடிவு செய்துள்ளது.
‘பாஸ்ட் ஸ்கேனர்’
தமிழகத்தில் பல டாஸ்மாக் கடைகள் குறைந்த பரப்பளவில் செயல்படுவதால், பெரிய தானியங்கி கருவிகளை அனைத்து கடைகளிலும் வைப்பது சாத்தியமில்லை. இதற்காக மாற்று முறையாக ‘பாஸ்ட் ஸ்கேனர்’ கருவி பயன்படுத்தப்பட உள்ளது.
தினமும் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான மதுபானங்கள் விற்பனையாகும் கடைகளில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னை திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூரில் தலா ஒரு கடையில் இந்த முறை சோதனை அடிப்படையில் நடைமுறைக்கு வந்துள்ளது.
எழும்பூரில் தானியங்கி கருவி சோதனை
இதன் முதற்கட்டமாக சென்னை எழும்பூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் தானியங்கி கருவி சோதனை அடிப்படையில் நிறுவப்பட்டது.
இந்த கருவியில் காலி பாட்டிலை செலுத்தினால் அது தானாகவே பாட்டிலை உள்ளே எடுத்துக்கொள்ளும். பின்னர் காலி பாட்டிலுக்கான ரூ.10 தொகை பயனரின் யு.பி.ஐ. கணக்கிற்கு செலுத்தப்படும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து ரூ.10 திருப்பி வழங்கப்படும்
ஸ்கேனர் பொருத்தப்பட்ட வாகனத்தில் பணியாளர் ஒருவர் இருப்பார். பொதுமக்கள் காலி பாட்டிலை அவரிடம் வழங்கியதும், பாட்டிலில் ஒட்டப்பட்டுள்ள அடையாள ஸ்டிக்கர் கருவி மூலம் ஸ்கேன் செய்யப்படும்.
ஸ்கேன் செய்த பிறகு பாட்டில் பெற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான தொகை திரும்ப வழங்கப்படும். இதன் மூலம், ஒரு நாளைக்கு சுமார் 8,000 காலி பாட்டில்களை சேகரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் சேகரிக்கப்படும் காலி பாட்டில்கள், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்படும். மேலும், கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் கையடக்க கருவி போன்ற சாதனத்தின் மூலம் ஸ்கேன் செய்து காலி பாட்டில்களை விரைவாகப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
