வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பெண் ஆசிரியை குறித்து இழிவாகவும் அவதூறாகவும் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அரசியல் கட்சி நிர்வாகி ரமேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் கடந்த ஆண்டு எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி, அதற்கு எதிராகவும் போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக தெரிகிறது.
பெண் ஆசிரியை குறித்து பேசியதாக புகார்
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியை குறித்து ரமேஷ் இழிவாகவும், கொச்சைப்படுத்தும் வகையிலும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அந்தப் பள்ளியில் பணிபுரியும் பெண் ஆசிரியை மற்றும் பெண் ஊழியர்கள் ஒன்றிணைந்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் ரமேஷ் மீது புகார் அளித்தனர்.
போலீசார் விசாரணை
புகாரை பெற்ற குடியாத்தம் நகர காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், புதிய நீதி கட்சியின் குடியாத்தம் நகர செயலாளரும், அகில இந்திய பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் மாவட்ட செயலாளருமான ரமேஷை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட ரமேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
