தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில மாவட்டங்களில் கனமழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்?
தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அருகே கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. இதனால் இன்று (ஆகஸ்ட் 17) மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்தப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 18-ல் 2 மாவட்டங்களுக்கு கனமழை
நாளை (ஆகஸ்ட் 18) செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 19-ல் 5 மாவட்டங்களில் மழை
ஆகஸ்ட் 19-ம் தேதி நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானிலை எப்படி இருக்கும்?
சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
