தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டால், அவசர மருத்துவ உதவி விரைவாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, விபத்து நடந்த இடத்தில் இருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருக்கும் ஆம்புலன்ஸ், தகவல் பெறப்பட்ட 10 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்தை சென்றடைய வேண்டும்.
இந்த காலக்கெடுவை பின்பற்றாத ஆம்புலன்ஸ் சேவை நிறுவனங்களுக்கு ஒவ்வொரு சம்பவத்துக்கும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
புதிய விதிமுறைகளின் முக்கிய அம்சமாக GPS அடிப்படையிலான கண்காணிப்பு இடம்பெற்றுள்ளது.
வாகனங்கள் எப்போது சம்பவ இடத்தை சென்றடைந்தன, எவ்வளவு நேரத்தில் பயணித்தன உள்ளிட்ட விவரங்களை GPS தகவல்கள் மூலம் கண்காணிக்க முடியும்.
விபத்து தொடர்பான அவசர அழைப்பை நிராகரித்தால், சம்பந்தப்பட்ட சேவை நிறுவனத்துக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். அதேபோல், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் மற்றும் பணியாளர்கள் ஆம்புலன்ஸில் இல்லாவிட்டாலும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதிய விதிமுறைகளை அதிகாரிகள் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 1033 என்ற அவசர உதவி தொலைபேசி எண் செயல்படுத்தப்பட்டுள்ளது.
