பல்லாவரத்தில் உள்ள பிரபல பிரியாணி கடையில் ஏற்பட்ட லிப்ட் விபத்தில் மூதாட்டி பலி

சென்னை பல்லாவரத்தில் உள்ள பிரபல பிரியாணி கடையில், ஏற்பட்ட லிப்ட் விபத்தில் 70 வயது பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இயங்கி வரும் பிரபல பிரியாணி உணவகத்தில் எம். மும்தாஜ் (70) என்ற பெண் ஊழியர் பணிபுரிந்து வந்தார். திங்கள்கிழமை காலை வழக்கம் போல் பணிக்கு வந்த அவர், காலை 10 மணியளவில் உணவகத்தின் முதல் தளத்தில் இருந்து இரண்டாவது தளத்திற்கு லிப்ட்டில் சென்றார்.

பின்னர், இரண்டாவது தளத்தில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த போது மின் தூக்கியின் கதவுகள், முதல் தளத்தை அடையும் முன்பே கதவுகள் திடீரெனத் திறந்துகொண்டன. இதை அறியாத மும்தாஜ், வெளியே வந்த போது மின் தூக்கியின் ஆழமான குழியில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த மும்தாஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த மும்தாஜின் உடல் உடற்கூறாய்வுக்காகத் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பல்லாவரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

Latest News