நடிப்பை ஏன் தேர்வு செய்யவில்லை? இயக்குனரான காரணத்தை பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தற்போது தமிழக முதல்வராக உள்ள விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தற்போது ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

‘சிக்மா’ மூலம் இயக்குநராக அறிமுகம்

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் பிரியா அப்துல்லா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் முதலில் ஜூலை 31 அன்று வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், ‘ஜனநாயகன்’ படம் காரணமாக ‘சிக்மா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. படத்தின் புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிப்பை விட இயக்கத்தை தேர்வு செய்தது ஏன்?

நிகழ்ச்சியில் பேசிய ஜேசன் சஞ்சய், சிறுவயதிலிருந்தே கதைகள் சொல்லும் ஆர்வம் இருந்ததாக கூறினார். நண்பர்களுடன் பேசும்போதோ அல்லது மனதில் தோன்றும் எண்ணங்களையோ எழுதிப் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் பழக்கம் தனக்கு இருந்ததாக தெரிவித்தார். இந்த ஆர்வமே பின்னர் திரைப்படக் கதைகள் எழுதுவதிலும், திரைப்பட உருவாக்கத்திலும் கவனம் செலுத்த வழிவகுத்ததாக கூறினார்.

கனடாவின் டொரோண்டோவில் உள்ள திரைப்படக் கல்வி நிலையத்தில் பிலிம் மேக்கிங் தொடர்பான படிப்பை முடித்ததாகவும், அப்போது தான் இயக்குநராகும் பாதையே தனக்கு பொருத்தமானது என்பதை உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஹாலிவுட் வாய்ப்பு வந்தால் விஜயைத்தான் தேர்வு செய்வேன்

நிகழ்ச்சியின் போது, “ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம் உங்களை ஒரு படம் இயக்க அழைத்து, இந்தியாவில் இருந்து ஒரு நடிகரை தேர்வு செய்யச் சொன்னால் யாரை அழைப்பீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், “எனக்கு முதலில் நினைவுக்கு வருவது அப்பா விஜய் தான். அவர் மற்றும் ஜேசன் ஸ்டேதம் இருவரும் இணைந்து நடித்தால் அது சிறந்த கூட்டணியாக இருக்கும் என பேசியுள்ளார்.

சிறுவயது நினைவுகளையும் பகிர்ந்த ஜேசன்

இதனுடன், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் சென்னை நகரில் நடைபெற்றபோது, தனது தந்தை விஜயின் தோளில் அமர்ந்து போட்டியை ரசித்த சிறுவயது அனுபவத்தையும் ஜேசன் சஞ்சய் பகிர்ந்து கொண்டார். குடும்பத்துடன் கழித்த அந்த தருணங்கள் இன்னும் மறக்க முடியாத நினைவுகளாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

நடிகரின் மகனாக இருந்தாலும், தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க இயக்குநர் பாதையைத் தேர்வு செய்துள்ள ஜேசன் சஞ்சயின் முதல் திரைப்படமான ‘சிக்மா’ மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் புரொமோஷன் நிகழ்ச்சிகளும் படத்தின் மீதான கவனத்தை மேலும் அதிகரித்துள்ளன.

Related Post

Latest News