பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில் வெளியிடப்பட்டிருந்த வீடியோ தற்காலிகமாக நீக்கப்பட்ட சம்பவத்திற்கு மெட்டா நிறுவனம் மன்னிப்பு தெரிவித்துள்ளது. இந்த வீடியோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறுதலாக அகற்றப்பட்டதாகவும், பின்னர் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
என்ன நடந்தது?
ஜூலை 28 அதிகாலை, பிரதமர் மோடி பேஸ்புக்கில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவில் நீட் வினாத்தாள் கசிவு பிரச்சனை, மாணவர்களின் போராட்டம் மற்றும் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேசியிருந்தார். பின்னர் அந்த வீடியோ நீக்கப்பட்டது.
மெட்டா அளித்த விளக்கம் என்ன?
இந்த விவகாரம் குறித்து மெட்டா வெளியிட்ட அறிக்கையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக வீடியோ நீக்கபட்டது என்றும், வேறு எந்தவிதமான நடவடிக்கையோ அல்லது அரசு உத்தரவின் அடிப்படையிலோ மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தவறாக நீக்கப்பட்ட வீடியோ மீண்டும் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதிக கவனம் பெற்ற பிரதமரின் வீடியோ
இந்த வீடியோ வெளியான 24 மணி நேரத்திற்குள் 30.3 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பிரதமர் மோடியின் சமூக வலைதள பதிவுகளில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது.
