பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ், தனது 88-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியலில் இருந்து முற்றிலும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இனி கட்சி விவகாரங்களிலோ அல்லது அரசியலிலோ தலையிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்..
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அவரது தைலாபுரம் தோட்டத்தில் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பாமக தலைவரும், ராமதாஸின் மகனுமான அன்புமணி ராமதாஸ், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் ராமதாஸ், “எனது 88-வது வயதில் நான் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். அரசியல் துறவறம் என்றால், இன்று முதல் நான் அரசியல் பற்றிப் பேச மாட்டேன்; எந்தவொரு அரசியல் விவகாரத்திலும் தலையிட மாட்டேன். இனி பாமகவின் அரசியலை அன்புமணி அவர்கள் முழுமையாகப் பார்த்துக்கொள்வார்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “என்னைக் காண வரும் அனைவரையும் எப்போதும் போலச் சந்திப்பேன். வருபவர்கள் என்னிடம் நலம் விசாரிக்கலாம், நானும் நலம் விசாரிப்பேன். ஆனால், யாரும் என்னிடம் அரசியல் பேச வேண்டாம். தயவுசெய்து இனி என்னை அரசியல் விவகாரங்களுக்காகத் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று திட்டவட்டமாகக் கேட்டுக்கொண்டார்.
