வேலூரில் பரபரப்பு: செய்தியாளர்களை தள்ளிவிட்ட எம்.எல்.ஏ., காட்பாடியில் நடந்தது என்ன?

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள VIT பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சிவில் இன்ஜினியர்ஸ் கூட்டமைப்பு சார்பில் DTCP கருத்தரங்கம் மாநிலத் தலைவர் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்றது. பொறியாளர் வெங்கடேசன் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் வினோத் கண்ணா, சுதாகர், சிந்து, தென்றல்குமார் மற்றும் மாநிலம் முழுவதிலுமிருந்து திரளான இளம் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார் பேசியதாவது:

நானும் ஒரு மெக்கானிக்கல் பொறியாளர் என்பதால் பொறியாளர்களின் கஷ்டங்களை அறிவேன். அதனால் தான் முதல்வர் எனக்கு இத்துறையை வழங்கியுள்ளார். கோப்புகளைத் தாமதிக்காமல் உடனுக்குடன் முடித்து அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

முன்பெல்லாம் கோப்புகள் பல கட்டங்களைக் கடந்து இறுதியில் ‘பார்ட்டி ஃபண்ட்’ வசூலிப்பதற்காக அமைச்சரிடம் வரும். அந்த நடைமுறையை நாங்கள் முற்றிலும் ஒழித்துவிட்டோம். முதலமைச்சரின் உத்தரவைப் பெற்று இனி நேரடியாக CMDA மூலமாகவே அனுமதி பெறலாம்.

தற்போது தமிழகத்தில் 38 சதவீத நகர்ப்புற வளர்ச்சி உள்ளது. 2047-ஆம் ஆண்டிற்குள் இது 50 சதவீதத்திற்கும் மேலாக அதிகரிக்கும். தமிழகத்தைச் சிங்கப்பூர் போல மாற்ற வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்பம். அதற்கேற்ப பொறியாளர்கள் கட்டிடங்களை வடிவமைக்க வேண்டும்.

பொறியாளர்களின் கோரிக்கைகள் வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்புகளாக வெளியாகும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் அளித்த பதில்கள்:

தொழில் பாதுகாப்பு நல வாரியம்: அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கே.வி.குப்பம் எம்.எல்.ஏ கோரிக்கை: இரண்டு தாலுகாக்களுக்கு உட்பட்ட இடங்களில் DTCP உள்கட்டமைப்பு அனுமதி அளிக்க அதிகாரி நியமனம் தொடர்பான மனு பரிசீலிக்கப்படும்.

அலமேலுரங்காபுரம் நிலப் போராட்டம்: பல தலைமுறையாக உள்ள இப்பிரச்சனை குறித்து மக்கள் என்னைச் சந்தித்தனர். இது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணப்படும்.

காவிரி நீர் பிரச்சனை மற்றும் மேகதாட்டு அணை விவகாரங்கள் நிலுவையில் உள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்து அமைச்சர்கள் கண்ணீர் வடித்தது குறித்த கேள்விக்கு, “அதெல்லாம் ஒன்றும் இல்லை” எனக் கூறிவிட்டு அமைச்சர் அவசரமாகக் காரில் ஏறிப் புறப்பட்டார்.

அமைச்சரிடம் செய்தி சேகரிக்க முயன்ற செய்தியாளர்களைப் பேட்டி எடுக்க விடாமல், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் சுதாகர் தள்ளிவிட்ட சம்பவம் அங்கிருந்த சொந்தக் கட்சியினரிடையே முகம்சுளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Related Post

Latest News